Categories
"புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்" கட்டுரைகள்

“புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்” அங்கம்-06 -முருகபூபதி

 ( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய  காணொளி ஆய்வரங்கில்  சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை) 

அவுஸ்திரேலியாவில் கவிதை இலக்கியம்,

” கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்.”  இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முருகையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கவிதைக்கு மிகவும் முக்கியம் எளிமை. அந்த எளிமை திரைப்படப்பாடல்களில் மலினப்பட்டது வேறு விடயம். தமிழ்நாட்டில், பாரதியைத்தொடர்ந்து பாரதிதாசனும் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கம்பதாசனும், கண்ணதாசனும்  வாலியும்  கவிதைக்கு மற்றும் ஒரு பரிமாணம் வழங்கியமை போன்று, இலங்கையில்  ஈழத்து பூதன் தேவனார் முதல் கவிஞர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, இ.முருகையன், நுஃமான், நீலாவணன், மு. பொன்னம்பலம், மு.தளையசிங்கம்,  அம்பி, நாகராஜன், அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், கே. கணேஷ், சி.வி. வேலுப்பிள்ளை  உட்பட மேலும் பல மூத்த கவிஞர்கள் கவிதைத்துறையை வீச்சுடன் முன்னெடுத்தனர்.

இவர்களில் மஹாகவி உருத்திரமூர்த்தி ” குறும்பா” என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.

பின்னாளில்,  இலங்கையில் மருதூர்க்கனி,   சோ. பத்மநாதன்,  சேரன், வ.ஐ. ச. ஜெயபாலன், ஊர்வசி, அனார், ஜவாத்மரைக்கார், ஜின்னா ஷரிப்புத்தீன் ,  அன்புடீன்,  முத்துமீரான், மொழிவரதன்,  மேமன்கவி, சித்தாந்தன், கருணாகரன், காவ்யன் விக்னேஸ்வரன், முதலான எண்ணிறைந்த கவிஞர்கள் கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர்.  அவர்களின்  பெயர்ப்பட்டியல் நீளமானது.

இலங்கையில் 32 நாடுகளைச்சேர்ந்த ஆயிரம் கவிஞர்களின் கவிதைகளும் தொகுக்கப்பட்டு வௌியாகியிருக்கிறது.

இலங்கையிலும்   தமிழ்நாட்டிலும்  1970-1980  காலப்பகுதியில் புதுக்கவிதை எழுச்சிமிக்க   இலக்கியமாக     பேசப்பட்டது.  தமிழ்நாட்டில்    வானம்பாடி    கவிஞர்களாக     வீச்சுடன்   எழுதவந்த                   வைரமுத்து,     மேத்தா, அப்துல்ரஹ்மான்,    அக்கினிபுத்திரன்,  மீரா,    சிற்பி, தமிழ்நாடன்,   தமிழவன், தமிழன்பன்,  கோவை  ஞானி,                    வைதீஸ்வரன்,பரிணாமன், புவியரசு,   இன்குலாப், கங்கைகொண்டான், உட்பட     பலரின்  புதுக்கவிதைகளின் தாக்கம் இலங்கையிலும் நீடித்தது.

அதேவேளை சிதம்பர ரகுநாதன்,  கலைமகள்  கி.வா. ஜகந்நாதன் முதலானோர் புதுக்கவிதையை      ஏற்காமல் எதிர்வினையாற்றினார்கள்.     வானம்பாடிகள்     இதழ்     சில       வருடங்கள் அழகான    வடிவமைப்புடன்    வெளிவந்தது. இலங்கையில்    1970 இற்குப்பின்னர் ஏராளமான  இளம்தலைமுறை    படைப்பாளிகள்     முதலில்         புதுக்கவிதை கவிஞர்களாகவே    அறிமுகமானார்கள்.

ஆங்கிலத்தில் New Poetry – Modern Poetry என அழைக்கப்பட்ட வடிவம் தமிழுக்கும் அறிமுகமானது. அத்துடன் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளும் தமிழ்க்கவிஞர்களுக்கு நெருக்கமாகின. சீர், தளை, அடி, தொடை முதலான வரையறைகளை கொண்டிராமல் புதுக்கவிதை நவீனத்துவம் பேசியது.

மஹாகவி உருத்திரமூர்த்தி புதியதொருவீடு, கோடை முதலான கவிதை நாடகங்களை எழுதியிருப்பவர். தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியும், வேதாளம் சொன்ன கதை, யாழ்ப்பாடி, அன்னம் விடு தூது முதலான கவிதை நாடகங்களை வரவாக்கியிருப்பவர்.  கவிஞர்கள் கவியரங்குகளிலும் பங்குபற்றுவதனால், கவியரங்கப்பாடல்கள் தொகுதிகளும் வாசகர் பார்வைக்கு கிட்டியிருக்கின்றன. இலங்கையில் சில்லையூர் செல்வராசன் ஊரடங்குப்பாடல்கள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் இலங்கையில் நுஃமான், சோ. பத்மநாதன், கே.கணேஷ் உட்பட மேலும் சிலர் பிறமொழிக்கவிதைகளை தமிழுக்குத்தந்தனர். மேலைத்தேய மற்றும் பாலஸ்தீன, வியட்நாமிய, சோவியத் உக்ரேய்ன், அஸர்பைஜான்  கவிதைகளையும்  இவர்களால் நாம் தமிழில் படிக்க முடிந்தது. அதேசமயம் கனடாவில் வாழ்ந்து மறைந்திருந்திருக்கும் செல்வா கனகநாயகம் பல ஈழத்துக்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார்.

தமிழில் கவிதையின்  தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராயப்புகுதல் ஆழ்கடலை ஆராயும் வேலையிலும் மிகப்பெரிது. காலத்துக்கு காலம் கவிதைத்துறை ஆழமும் அகற்சியும்கொண்டு புதிய புதிய பரிமாணங்களை பெற்றுவருகிறது. இலங்கையிலும் தமிழகத்திலும் மலேசியா, சிங்கப்பூரிலும் தமிழ்க்கவிதை இயக்கங்களும் நடந்திருக்கின்றன.  கவிதைகளுக்கான சிற்றேடுகளும் வெளியாகியுள்ளன.

சமகாலத்தில் முகநூலில் துணுக்குகளும் கவிதை வடிவில் வரத்தொடங்கிவிட்டன. அத்தகைய முகநூல் குறிப்புகளிலும் எமது முன்னோர்களின் கவிதை வரிகளை ஆதாரமாகக்கொள்ளும் இயல்புகளும் பெருகியிருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நூடில்ஸ் பாவனைக்கு தடை வந்தபோது ஒரு முகநூல் குறிப்பு இவ்வாறு வெளிவந்தது:

” நூடில்ஸின் வாழ்வுதனை சூது கவ்வும், இடியப்பம் ஓர் நாள் வெல்லும்”

” தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் ஓர் நாள் வெல்லும்” என்ற மகாகவி பாரதியின் கூற்றிற்கு இக்காலக்கவிஞர் நூடில்ஸிலிருந்து விளக்கம் தந்திருக்கிறார்.

இத்தகைய பின்னணிகளுடன்  அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கவிஞர்களின் முயற்சிகளையும் அவர்களின் படைப்பூக்கத்தையும் நாம் அவதானிக்கலாம். கடல் சூழ்ந்த இக்கண்டத்திலும் கவிதை முயற்சிகளை ஆராய்வதும் எம்மைச்சூழ்ந்துள்ள பசுபிக் கடலில் மூழ்கி  முத்தெடுப்பது போன்ற செயலே!.

இங்கும் கவிதைத்துறையில் ஆர்வம் காண்பிக்கும் பலர் கவியரங்கு கவிஞர்களாகவும் வெளிப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இலங்கையிலும் இந்தத்துறையில் ஈடுபாடு மிக்க பலர், இங்கு வந்தபின்னரும் புகலிடத்தின் பகைப்புலத்தில் கவிதைகளை படைத்துவருகின்றனர்.

சிட்னியிலிருந்து அம்பி, செ. பாஸ்கரன், சவுந்தரி கணேசன், நட்சத்திரன் செவ்விந்தியன், நந்திவர்மன், இளமுருகனார் பாரதி, மனோ ஜெகேந்திரன், பாமதி பிரதீப், விழிமைந்தன் பிரவீணன் மகேந்திரராஜா, மு. கோவிந்தராஜன், உஷா ஜவஹார்,  சந்திரகாசன், (அமரர்) வேந்தனார் இளங்கோ, பூலோகராஜா விஷ்ணுதாசன், பா. ஆனந்தகுமார்  கன்பராவிலிருந்து ஆழியாள் மதுபாஷினி, யோகானந்தன், குவின்ஸ்லாந்திலிருந்து (அமரர்) சண்முகநாதன் வாசுதேவன், வாசுகி சித்திரசேனன், சோழன் இராமலிங்கம் ஆகியோரும், மெல்பனிலிருந்து ‘பாடும்மீன்’ சு. ஶ்ரீகந்தராசா, நல்லைக்குமரன் குமாரசாமி, கல்லோடைக்கரன், மாவை நித்தியானந்தன், ஆவூரான் சந்திரன், ஜெயராம சர்மா, மெல்பன் மணி, ராணி தங்கராஜா, சாந்தினி புவநேந்திரராஜா, சுபாஷினி சிகதரன், ரேணுகா தனஸ்கந்தா, கே. எஸ். சுதாகரன், நித்தி கனகரத்தினம், நவரத்தினம் இளங்கோ, சங்கர சுப்பிரமணியன், பொன்னரசு, அறவேந்தன், தெய்வீகன், ஜே.கே., கேதா, வெள்ளையன் தங்கையன், சுகுமாறன், வெங்கடாசலபதி, குகன் கந்தசாமி, ஶ்ரீகௌரிசங்கர், லக்‌ஷிகா கண்ணன், அருணமதி குமாரநாதன்,  வஜ்னா ரஃபீக்,  நளிமுடீன்,  முதலான பலரும் கவிதைத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள்.

இவர்களில் சிலரது கவிதைகள் நூல்களாகவும் தொகுக்கப்பட்டு வரவாகியுள்ளன. எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2007 ஆம் ஆண்டு நடத்திய ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட வானவில்  கவிதைத்தொகுப்பிலும் இந்த நாட்டில் வதியும் பல கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்கள் இதுவரையில் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் நகரங்களில் நடைபெற்றவேளைகளில் கவியரங்குகளும் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் பல கவிஞர்கள் பங்குபற்றி தத்தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். அத்துடன் மெல்பனில் கவிதை வாசிப்பு அமர்வுகளையும் இச்சங்கம் கடந்த காலங்களில் நடத்தியிருப்பதுடன் கவிதை நூல்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

கன்பராவில் வதியும் ஆழியாள் மதுபாஷினியும், சிட்னியில் வதியும் பாமதி பிரதீப்பும் இந்தத்தேசத்தின் பூர்வகுடிமக்களின் வாழ்வை சித்திரித்தும் கவிதைகள் எழுதியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் எந்தவொரு மாநிலத்திலும் தமிழ் விழாக்கள் நடந்தாலும் கவியரங்கிற்கும் நேரம் ஒதுக்கிவிடுவார்கள்.

பெரும்பாலான கவிஞர்கள் தங்கள் கவிதைகளை சமர்ப்பிக்கும்போது தங்கள் படைப்பூக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவும், எழுதிய வரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் ஒரே வரியை மீண்டும் மீண்டும் சொல்லி பார்வையாளர்களுக்கு சலிப்பேற்படுத்துவதிலும் முன்னிற்பர்.

இலங்கையில் நீடித்த போர்க்காலம்,  புகலிட வாழ்வுக்கோலங்கள், இரண்டக சிந்தனைகள், தலைமுறை இடைவெளி,  ஏமாற்ற ஆதங்கம்  என்பன அவர்களின் கவிதைகளில் பிரதான கருப்பொருளாகவும் அமைந்திருக்கும்.

மரபுக்கவிதையா..? புதுக்கவிதையா ?  எனப்பேதப்படுத்திப்பார்க்காமல்,  அனைத்தும் கவிதைதான் என ஏற்றுக்கொண்ட காலத்திற்கு வந்துள்ளோம்.

 “அதிகாரம்  துப்பாக்கி  வடிவில்  ஆளும்  வர்க்கத்திடமும்              விடுதலை பெற்றுத்தருவோம்  என்று  புற்றீசலாய்  புறப்பட்டு  வந்த இயக்கங்களிடமும்   இருந்தது.   ஆனால்,  ஆளும்  வர்க்கத்திற்கும் அதற்கு   எதிராக  புறப்பட்டவர்களுக்கும்  துப்பாக்கிகள்  எங்கிருந்து வந்தன…?    துப்பாக்கிச்சன்னங்களுக்குள்  நசுங்கி  மடிந்த  அப்பாவி இன்னுயிர்கள்    எத்தனை   எத்தனை…?  “ இவ்வாறு தனது கவிதையில் கேள்வி எழுப்பியவர் சிட்னியில் வதியும் கவிஞர் செ. பாஸ்கரன். ( நூல்: முடிவுறாத முகாரி )

 “ அது சமாதனத்தின் காலம், எனவும் போர்கள் எல்லாம் புறங்காட்டிப் போன காலம் எனவும் பேசிக்கொண்டார்கள்,

நாங்கள் நுனிமர உச்சிகள் தாவி, காற்றைக்கடந்ததுடன், இளமுகில்களைக் கிளறி, வற்றாத கிணறுகளுக்காக வானத்தைக் குடைந்த போது,

நட்சத்திரங்கள் வெளிப்பட்டன,  புதைகுழிகளிலிருந்து நாறிக் காய்ந்த பிணங்களின் விலா என்புகளாய்..”  என்று ஞாபக அடுக்குகளைப்பேசியது கன்பராவில் வதியும் கவிஞி ஆழியாளின் ஒரு கவிதை ( நூல்: துவிதம் ) 

 “ மண்பார்த்து விதை பயந்தால் – மரமொன்று உயிராகாது – நீர் பார்த்து மீன் பயந்தால் – மீனொன்று உயிர் வாழாது – இரவின் முடிவில்தானே விடியல் – உதிர்ந்த பின்புதானே துளிர்த்தல் – இரவும் பகலும் இதுவே வாழ்க்கை – அவ்வப்போது அற்புதங்கள் நடக்கும் – அல்லாது போனாலும் ஒன்றுமில்லை – உனக்கான மீட்பனும் – உதவாது போனாலும் ஒன்றுமில்லை   “  என்று வாழ்வின் மீதான நம்பிக்கையையும் வாழ்வின் காதலையும் சிட்னியில் வதியும் செளந்தரி கணேசனின் கவிதை பேசுகிறது. ( நூல்: நீர்த்தாரை )

 “ தமிழ் ஓசை கேட்பதற்கு தவியாய் தவிக்கின்றோம்

தமிழ் மொழியில்; பேசுவதா – தலைகுனிந்து நிற்கின்றோம்

அமுதான தமிழ் மொழியில் அழகாகக் பேசிவிடின் – அன்னை முதல் அனைவருமே ஆகமகிழ்ந்து நிற்போமே”   என்று தனது புகலிட ஆதங்கத்தை கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா வெளிப்படுத்துகிறார். ( நூல்: உணர்வுகள் )

அவுஸ்திரேலியாவிலிருந்து  சமகாலத்தில் தொடர்ந்தும்  அதிகம் கவிதைகளை எழுதுபவராக இவர் இனம்காணப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

“  பூங்குயில் கூவும் கவிதைப் பூங்காவினுள்  ஓங்கு புகழ்க் கவினுறு புஷ்பங்கள் தீங்கறு தெய்வீக கான மலர்கள் மாங்கிளி பேசும் வண்ணச் சோலையில் வேங்கையின் வீரம் கூறும் பாக்களும் தாங்கிய மண்வாசனை சாற்றும் கவிதைகள் தேங்கியே சிறுவர் மனத்தினில் கிளர்ச்சியைத் தூங்காது தட்டிக் கொடுக்கும் பூவரும்புகள் பங்கு பங்காகப் பரிமளிக்கும் சந்தக் கவி இங்கு ஓசை நயத்தை எடுத்தியம்பும் நீங்காத வாழ்க்கைத் தத்துவமும் பல்சுவையும் பாங்கான காதலின் வெளிப்பாட்டு பாட்டுக்களும் ஏங்கும் காவினுள் நுழைந்து பாரீர் நீங்கள் காவினுள் நுழைந்து இன்பத்தை உள்வாங்கி மகிழவேண்டும்  “ என்று மெல்பனில் வதியும் கவிஞர் மெல்பன் மணி தமது கவிதைப்பூங்கா நூலுக்குள் வாசகரை அழைக்கின்றார். ( நூல்: கவிதைப்பூங்கா )

இவர் கீர்த்தனை மாலை என்ற நூலையும் வெளியிட்டிருப்பவர்.

இலங்கை, பாப்புவா நியூகினி என்று நாடுகள் கடந்து அலைந்துழன்று இறுதியில் அவுஸ்திரேலியா சிட்னியில் தஞ்சமடைந்திருக்கும் கவிஞர் அம்பி, அவுஸ்திரேலியாவில் வாழும் மூத்த கவிஞராவார்.

தமிழகத்தில் அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த காலப்பகுதியில் நடந்த உலகத்தமிழ் ஆராய்சி மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட அனைத்துலக கவிதைப்போட்டியிலும் தங்கப்பதக்கம் பரிசு பெற்றவர்.

அந்தச்சிரிப்பு என்னும் கவிதை நாடக நூலையும் அம்பி கவிதைகளை வரவாக்கியிருப்பவர். மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் எழுதியவர்.

புகலிட வாழ்வுக்கோலத்தை அவருடை ஏமாற்றம் கவிதை இவ்வாறு சொல்கிறது:

பி.ஆர். கிடைத்துப் பெரும் ஆர்வம் பொங்கிவர ஆறுமுகத்தார் அருமையென வாய் ஊறும் பாணிப் பனாட்டும் பனங்கட்டிக் குட்டானும் பேணிக்கொணர்ந்தார் தம் பேரருக்கு – வாணி என்று நாடி அவர் கொஞ்ச –  நப் என்றாள் வாயில் அதைப்போடுகையில் யக் என்றாள் பெண்.

புகலிடத் தமிழ்க்குழந்தைகளின் நாவில் தவழும் நப் – யக் முதலான எழுத்துக்கள் விருப்பமின்மையின் அடையாளம்.

( நூல்: அம்பி கவிதைகள் )

இளங்கோவடிகள் தொடங்கி வில்லியம் வேரட்ஸ் வர்த் வரைக்கும் மணி முடி சூட்டிய அந்த இயற்கைத்தாய்க்கு இதோ இந்த மழைத்துளியின்  ‘ கவிமுடி  ‘   என்று தனது மழைத்துளி – புதுக்கவிதை ஈரத்தோடு இயற்கைக்கு முடிசூட்டுகிறார் சிட்னியில் வதியும் கவிஞர் பா. ஆனந்தகுமார்.  ( நூல்: மழைத்துளி )

 “ காற்றோடு  காற்றாகக் கலந்து போய்விடாமல்

காலத்தின் பதிவாக தொடர்ந்து வாழவேண்டுமென்று

நச்சரித்து நச்சரித்து நண்பர்கள் வேண்டியதால்

இச்சையொன்று  எனக்குள்  எழுந்து  தூண்டியதால்

இத்தொகுப்பு வருகிறது – புத்தகமாய் மலர்கிறது  “   என்று தனது தமிழினமே தாயகமே கவிதை நூலுக்கு கட்டியம் கூறும் கவிஞர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா, தனது ஈழக்கனவையும் தமிழ் உணர்வையும் வெளிப்படுத்தி எழுதிய கவிதைகளை இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.  கிழக்கிலங்கையைச் சேர்ந்த இவர்,   மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களையும் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.

மெல்லத் தமிழ் இனி வாழும் என்ற கவிதை நூலை வரவாக்கியிருக்கும் கவிஞர் எஸ்.எம். சேமகரன்                                              ( கல்லோடைக்கரன் ) மெல்பனில் – புகலிடத்தில் வாழ்ந்தவாறு இத்தலைப்பில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தாலும், புலப்பெயர்வின் இரண்டகத்தன்மையை உணர்ந்தவாறே,  “ மீண்டுமொரு புலப்பெயர்வு நடக்கு மிது திண்ணமாம்  –  ஆண்டுகள் பல நூறு ஆயிடினும் என எண்ணமாம் –  வெளி நாடு பலவற்றில் குவிந்திருக்கும் எம் தமிழம் ஒரு நாளில் தாய் நாட்டை நோக்கிப் புலம் பெயர்ந்திடுமாம்  “  என்ற எதிர்கால நம்பிக்கையையும் விதைக்கின்றார்.

சிட்னியில் வதியும் கவிஞர் த. நந்திவர்மன் யாப்பிலக்கணத்திற்குட்பட்டு தொடர்ந்தும் மரபுக்கவிதைகள் எழுதிவருபவர். இவரது எழில்பூக்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் அதற்குச்சான்று.

கவிஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள்.  கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்துகொண்டிருப்பவர்கள்.  வாழ்வின் தரிசனங்களை கவிதையாக்கிப்பார்ப்பதற்கு துடிப்பவர்கள்.

அதனால் தீர்க்கதரிசனம் மிக்க தமது உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு எத்தனம் காண்பிப்பவர்கள்.

நெஞ்சில் சுமந்த தீர்க்கதரிசனம் சாத்தியமாகாத பட்சத்தில், தமது ஆதங்கத்தையும் கவிதை வரிகளிலிலேயே வெளிப்படுத்தவும் தயங்காதவர்கள்.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அதன் உறுப்பினர் கவிஞர் மணியன் சங்கரனின் ஒருங்கிணைப்பில் வருடாந்தம் கவிதா மண்டலமும் நடத்தி வந்தது.

இந்த கொரோனா காலத்தில், சமூக இடைவெளி பேணவேண்டியிருப்பதனால், நாமும் இணைய வழி காணொளி கவிதா மண்டலம் நடத்தவேண்டிய சூழ்நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளோம்.

( தொடரும் )

(  பிற்குறிப்பு: மதுரைத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் நடத்திய தொடர் ஆய்வரங்கில் எனது உரையில் விரிவஞ்சி நான் தவிர்த்துக்கொண்ட பகுதிகளையே வாசகர்களுக்காக இங்கே பதிவுசெய்துள்ளேன். )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s