Categories
நினைவுப் பகிர்வுகள்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காப்பாளர் ‘கலைவளன்’ சிசு நாகேந்திரன் மறைந்தார் பல்துறை ஆற்றல் மிக்க கலைஞரை இழந்தோம்! -முருகபூபதி

Sisu Nagenthiran

தனது 99 வயதினை நெருங்கும் வேளையில் எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் மூத்த எழுத்தாளரும்  நாடக, கூத்து கலைஞரும் சமூகப்பணியாளரும் ஒளிப்படக்கலைஞருமான கலைவளன் சிசு நாகேந்திரன்.

நீண்டகாலம்  அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்தவர்.   ஒரு சில வருடங்களுக்கு முன்னர்  அவரது புதல்வியும் பேரப்பிள்ளைகளும்  அவரை சிட்னிக்கு அழைத்துச்சென்று, அங்கு ஒரு முதியோர் காப்பகத்தில் பராமரித்துக்கொண்டிருந்தனர்.

யாழ். நல்லூர்    இவரது  பூர்வீகம்  எனச்சொல்லப்பட்டாலும்,  பிறந்தது கேகாலையில்  1921 ஆம்  ஆண்டில்.   இவரது பிறந்த தினம் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி.

அந்நாளைய  அரிவரி  தொடக்கம்  லண்டன் மற்றிக்குலேஷன்    வரையில்  யாழ்.  பரமேஸ்வரா       கல்லூரியில் ( இன்றைய யாழ்.  பல்கலைக்கழகம்)   படித்த  நாகேந்திரன்,   பின்னர்  யாழ். மத்திய  கல்லூரியில்  வர்த்தக  முகாமைத்துவம்  கற்று, London Chamber of Commerce  உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார்.

1944   இல்  மன்னார்  அரசாங்க  அதிபராக  கடமையாற்றிய சிற்றம்பலம்  அவர்களிடம்  தட்டச்சாளராக  பணியாற்றும்  அரச நியமனம்   கிடைத்தது.   பின்னர்  கொழும்பில்  அரச  திணைக்களம் ஒன்றில்    பணிபுரியும்போது  கணக்காய்வாளராக  பதவி  உயர்வு பெற்றார்.    அதனைத்தொடர்ந்து,  1979  இல்   சேவையிலிருந்து ஓய்வுபெறும்   வரையில்    பல்வேறு  திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.

இளமைக்காலத்தில்  மாணவர்    தலைவராகவும்  பல்துறை  விளையாட்டு  வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.   உதைபந்தாட்டம்,    கரப்பந்தாட்டம்,  டெனிஸ், டேபிள்   டெனிஸ்  முதலானவற்றிலும்  வல்லவராகியிருக்கிறார்.

இவரது  கலை  உலக  வாழ்க்கையும்  குறிப்பிடத்தகுந்தது. கொழும்பில்  தொழில்  நிமித்தம்  வாழ்ந்த  காலத்தில், ‘ராஜ்  நகைச்சுவை  நாடக  மன்றம்’  இவரை உள்வாங்கியிருந்தமையால்   இம்மன்றம்  மேடையேற்றிய பல நாடகங்களில்   தோன்றினார்.    அச்சுவேலி    ராஜரட்ணத்துடன்  இணைந்து   ‘சக்கடத்தார்’ என்னும்   நாடகத்தில்  ஒரு பாத்திரமானார்.

இந்நாடகம்  ஆயிரம்  தடவைகளுக்கு  மேல்  மேடையேறியிருக்கும்.  ரகுநாதனின்  நிர்மலா, வி. எஸ். துரைராஜா தயாரித்த   குத்துவிளக்கு  முதலான    திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார்.

அந்நாட்களில்  தமிழ்  வானொலி  நேயர்களின்  விருப்பத்துக்குரிய நாடகங்களாகத் திகழ்ந்த  சிறாப்பர்  குடும்பம்,   லண்டன்  கந்தையா முதலானவற்றிலும்   நடித்திருக்கிறார்.

மேடை, வானொலி  திரைப்பட, கூத்துக் கலைஞராகவும் இவர் திகழ்ந்தமையால், தனிப்பட்ட உரையாடல்களின்போதும் அங்கதமாகவும் பேசும் இயல்பினைக்கொண்டிருந்தவர்.

இங்கிலாந்திலும்  சிறிது  காலம்  வாழ்ந்திருக்கும்  இவர்,  அங்கு ‘களரி’ நாடகப்பள்ளியின்   சார்பாக  மேடையேறிய  புதியதொரு வீடு, அபசுரம்,    எந்தையும்  தாயும்  முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்.

1994  ஆம்   ஆண்டு  இங்கிலாந்திலிருந்து  விடைபெற்று அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்த   தருணத்தில்  கலைஞர் தாசீசியஸ்  உட்பட  பலர்  இவருக்கு  அளித்த  பிரிவுபசார வைபவத்தில் ‘கலைவளன்’  என்ற  பட்டமளிக்கப்பட்டார்.

இவர் எழுதிய  அந்தக்கால    யாழ்ப்பாணம்  பற்றிய கட்டுரைகள்   நூலுருவாகி   பலரதும்  பாராட்டையும்  பெற்றது.

பிறந்த  மண்ணும்  புகலிடமும்  என்னும்  மற்றுமொரு  கட்டுரைத் தொகுதியையும்  வரவாக்கினார்.

நாடகக்கலைஞனாக   அறிமுகமாகி  எழுத்தாளனாக  தன்னை வளர்த்துக் கொண்ட  சிசு. நகேந்திரன்,   சிறந்த ஒளிப்படக்லைஞருமாவார்.   சில  வருடங்களுக்கு  முன்னர்  ஆரோக்கியமாக  வாழ்வதற்குரிய  சில உடற்பயிற்சிகள்   பற்றிய  இவரது  பயிற்சியும்  காட்சியும்  இடம்பெற்ற    இறுவட்டையும்  வெளியிட்டார்.

அவுஸ்திரேலியாவில்      தமிழ்   இலக்கிய  கலைச்சங்கம்,     விக்ரோரியா  ஈழத் தமிழ்ச்சங்கம்,   தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,    இலங்கை   மாணவர்  கல்வி  நிதியம்,  விக்ரோரியா  கே.சி. தமிழ் மன்றம்,  விக்ரோரியா தமிழ் மூத்தபிரஜைகள் சங்கம்  ஆகியனவற்றிலும்       இதயசுத்தியோடு  இயங்கியவர்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சேவை நலன் பாராட்டு விருதும்   அவுஸ்திரேலியா  கம்பன் கழகத்தின் மாருதி விருதும் அக்கினிக்குஞ்சு இணைய இதழின் வாழ்நாள் சாதனையாளர் விருதும்  பெற்றவர்.

முன்னர் எழுதிய ” பழகும் தமிழ்ச்சொற்களின் மொழி மாற்று அகராதி – ( தமிழ்- ஆங்கிலம்) நூலின் இரண்டாம் பாகமும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தவர்.

சுமார் 99 ஆண்டுகள் முழுமையான வாழ்வு வாழ்ந்து விடைபெற்றிருக்கும் ஆளுமை கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்களின் நினைவுகளே இனி எம்மிடம் எஞ்சியிருக்கும்.

எமது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம்.

சிசு. நாகேந்திரன் அய்யாவின் இறுதி நிகழ்வுகள் சிட்னியில் கடந்த 15-02-2020 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் சார்பில் அன்னாரின் பூதவுடலுக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எமது சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர் வெளியிட்ட அனுதாபச்செய்தி:

“  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும், சங்கத்தின் அமைப்பு விதிகளை மறு சீரமைத்ததில் முக்கிய பங்காற்றியவரும், சங்கத்தின் காப்பாளராக விளங்கியவருமான மூத்த கலைஞரும், எழுத்தாளருமான கலைவளன் சிசு .நாகேந்திரன் அவர்கள் சிட்னியில் மறைந்த செய்தி அறிந்து எமது சங்கத்தின் உறுப்பினர்கள் ஆழ்ந்த துயரமடைந்துள்ளோம்.  “ இவ்வாறு நேற்றைய தினம் திங்கட்கிழமை 10 ஆம் திகதி சிட்னியில் மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்களை நினைவுகூர்ந்து வெளியிடப்பட்ட அனுதாபச்செய்தியில், சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்  முதலாக அவுஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், பின்னாளில் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற பெயரில் இயங்கத்தொடங்கியதும், அதில் இணைந்து இயங்கியிருக்கும் கலைஞரும்  எழுத்தாளரும், ஒளிப்படக்கலைஞருமான சிசு நாகேந்திரன் அய்யா அவர்கள், எமது சங்கம் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய  மாநகரங்களில் நடத்திய எழுத்தாளர் விழாக்களிலும், மற்றும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும் உற்சாகமாக  பங்கேற்று கருத்தரங்குகளிலும் உரையாற்றியவர்.

இச்சங்கத்தின் தொடக்க கால அமைப்பு விதிகளை மறு சீரமைப்பதிலும் இவரது ஆக்கபூர்வமான பங்களிப்பு கிடைக்கப்பெற்றது. சங்கத்தின் செயற்குழு  உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும்,  தலைவராகவும் – பின்னாளில் காப்பாளராகவும் இணைந்திருந்தவர்.

சங்கத்தின் ஆஸ்தான ஒளிப்படக்கலைஞராகவும் இயங்கியவர்.  இவர் எழுதிய பிறந்த மண்ணும் புகலிடமும் என்னும் நூலை எமது சங்கத்தின் சார்பாகவே வெளியிட்டவர்.

2005 ஆம் ஆண்டு சங்கத்தின் ஐந்தாவது தமிழ் எழுத்தாளர் விழாவில்,  இவரது  கலை, இலக்கிய வாழ்வையும் பணிகளையும் பாராட்டி எமது சங்கம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வயது மூப்பினால் சோர்ந்துவிடாமல், தொடர்ந்தும் இயங்கிய சமூகப்பணியாளராகவும் திகழ்ந்திருக்கும் கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னார் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்தும்  எம்மவர்கள் மேற்கொள்வதன் மூலமும் அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவிக்கமுடியும்.

சிசு நாகேந்திரன் அய்யாவின் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருக்கும் அய்யாவின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவினர்கள் நண்பர்களின் சோகத்திலும் எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பங்குகொள்கின்றது.

அய்யாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர்

செயலாளர்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

atlas25012016@gmail.com                          www.atlasonline.org

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s