- தெய்வீகன்
ஈழத்தமிழினம் எனப்படுவது தொன்மையான வரலாறு ஒன்றின் அடையாளம். ஆராய்ச்சிகளால் வெளியிடப்பட்ட ஆதாரக்கூறுகளுக்கு அப்பால் பண்பாடு, கலாசாரம், மரபு என பல வரலாற்றுக் காரணிகளால் காலநீரோட்டத்தில் தனது நீட்சியை வெளிப்படுத்தி நிற்கும் பாராம்பரிய வரலாற்றுச்சுட்டி. இந்த வரலாற்றுக் காரணிகளின் மேற்பரப்பை சற்றுச் சுரண்டினால் அங்கு அந்த இனம் அனுபவித்த பாரம்பரிய உரிமைகளையும் அந்த இனத்துக்கு உரித்தான தனித்துவப் பண்புகளையும் எவருமே சொந்தம் கொண்டாட முடியாத தேசிய வளங்களையும் கண்டறிந்து கொள்ளலாம்.
இந்த வரலாற்றுக் காரணிகளே அந்த இனத்தின் தொன்மையை இன்றும் என்றும் தாங்குகின்ற பாரிய அடையாளங்களாக பங்கு பாராட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, தனது இனத்தின் பாரம்பரியத்தை அழியாது பாதுகாத்துக் கொள்வதில் ஈழத்தமிழினம் பல்வேறு வகையிலும் தனது தனித்துவங்களை கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்துவருகிறது.
ஈழத்தமிழினத்தின் இந்த வரலாற்றின் ஆதார சுருதியாக இன்றும் பேணப்பட்டு வருபவற்றில் முக்கியமானவை தொன்மையை பறைசாற்றும் வரலாற்றுச் சின்னங்கள். அவை அந்த இனத்தின் அடையாளங்களாக மட்டும் இருந்துவிடாது தொன்மைமிகு காலத்தில் தன் இனம் வாழ்ந்த வீரமான வாழ்வியல் அனுபவங்களையும் அதில் எதிர்கொண்ட சவால்களையும் ஒரு பாடப்புத்தகமாக தன்னகத்தே வரித்து வைத்திருக்கிறது.
இந்த வரலாற்று அடையாளங்கள் கடந்த தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைகளுக்கும் பல செய்திகளை வெளிப்படுத்தி வருகிறது. ஏனைய இனங்களின் வரலாறுகளோடு ஒப்பிடுகையில் ஈழத்தமிழினம் எத்துனை மிடுக்கான பாதையில் தன்னை வழிநடத்தி வந்திருக்கிறது என்ற பெருமையையும் திறனாய்வு செய்திருக்கிறது.
ஆனால், இன்று அந்த இனத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களின் மீது இடிவீழ்ந்த நிலையாக ஈழத்தமிழினத்தின் தொன்மையான பாரம்பரிய அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படும் அவலம் அந்த பாரம்பரிய மண்ணில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. எது எமது பாரம்பரியம், எது எமது பண்பாடு, எது எமது வீரம், எது எமது வரலாறு என்று இன்னமும் திமிருடன் கூறக்கூடிய வகையில் ஈழத்தமிழினம் தனது வாழ்வியலில் சாதனைகளை நிலைநாட்டி சரித்திரங்கள் படைத்ததோ, அந்த சரித்திரத்தின் ஆணிவேர் இன்னோர் இனத்தின் ஆக்கிரமிப்புக் கொடும் கரங்களால் அடையாளமின்றி துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது ஓர் இனத்தின் வரலாற்று அடையாளங்களையும் அதன் ஆதாரங்களையும் வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து அப்படியே இல்லாதொழிக்கும் மிகக்கொடூரமான இன அழிப்பு. இந்த படுபயங்கரமான நடவடிக்கை ஈழத்தமிழர்களின் பூர்வீக தாயகமான தமிழ்மண்ணில் பரவலாக பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர் தாயகமெங்கும் பல்லாண்டு காலமாக காணப்பட்ட நினைவுத்தூபிகள், நினைவுக்கற்கள், தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றி உலகத்தின் நீதிக்கதவுகைளைத் திறப்பதற்கு முயன்று விடுதலை வேட்கையுடன் வீழ்ந்த மாவீரர் துயிலுமில்லங்கள் என தமிழ்மக்கள் மட்டுமல்லாது தமிழர் தாயகத்துக்கு சென்று எல்லோருமே வழிபட்ட அந்தப் புனிதக்கோயில்கள் என அனைத்துமே இன்று ஆக்கரிமிப்பாளர்களின் அகழ்ந்தெறியப்படுகின்றன.
ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது என்பதை இனித்தோன்றும் தலைமுறை எவருக்குமே தெரியக்கூடாது என்று கொடுஞ்சிந்தனையுடன் இந்த கருவறுப்பு இடம்பெற்றுவருகிறது.
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுக்கல் தகர்ப்பு
தமிழரின் வீரம்செறிந்த மண்ணாம் வன்னியில் ஓட்டிசுட்டான் கற்சிலைமடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதமாக்கப்பட்டுள்ளது. 1803 ஆம் ஆண்டு ஓக்ஸ்ட் மாதம் 31 ஆம் நாள் பண்டாரவன்னியனுக்கும் ஆங்கிலேயத் தளபதி கப்டன் றிபேக்கும் பெருஞ்சமர் நிகழ்ந்ததாகவும், இந்த மோதலில் பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்ட அந்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்து. கடந்த பல வருடங்களாக அந்த நினைவுச் சின்னம் இருந்த இடம் வன்னி மக்களால் புனிதமான பகுதியாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந் நினைவுச்சின்னம், பண்டாரவன்னியனின் சிறப்பையும், நினைவையும் வெளிப்படுத்தியதோடு, தமிழர்களின் முக்கிய வரலாற்றுச் சாசனமாகவும் அமைந்திருந்தது. ஈழத்தமிழினம் தொடர்பான வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆதாரபூர்வமான சின்னமாகவும் அது விளங்கியது. அந்த புனித பிரதேசம் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்றே தமிழர் தாயகமெங்கும் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் மீதான அழிப்பு நடவடிக்கையும் அமைகிறது. அடக்கப்பட்ட ஓர் இனம், தன்னை ஆக்கிரமித்த இனத்துக்கு எதிராக மூன்று தசாப்த காலமாக மேற்கொண்ட விடுதலைப்போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களை விதைத்த புனித கோயில்களே மாவீரர் துயிலும் இல்லங்கள் எனப்படுகின்றன. இந்த இல்லங்கள் தமிழர்களின் புனித கோயில்கள். ஆண்டுதோறும் அங்கு சென்று தீபமேற்றி வழிபட்டு, இனத்தின் மானத்தை காக்க விடுதலை வேட்கையுடன் சென்று சமராடி சரித்திரம் படைத்துவிட்டு மரித்த அந்த தேசத்தின் தெய்வங்களை தமிழர்கள் தங்கள் இதயத்தில் சுமக்கிறார்கள்.
தமிழர் தாயகத்தில் –
அம்பாறை மாவட்டம்
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்.
மட்டக்களப்பு மாவட்டம்
தரவை மாவீரர் துயிலுமில்லம்.
தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.
கல்லடி மாவீரர் துயிலுமில்லம்.
மாவடி மாவீரர் துயிலுமில்லம்.
திருகோணமலை மாவட்டம்
ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம்.
பெரியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.
உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.
மணலாறு மாவட்டம்
ஜீவன்முகாம் மாவீரர் துயிலுமில்லம்.
டடி முகாம் மாவீரர் துயிலுமில்லம்.
வவுனியா மாவட்டம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
மன்னார் மாவட்டம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.
முல்லைத்தீவு மாவட்டம்
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.
அலம்பில் மாவீரர் துயிலுமில்லம்.
ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
வன்னிவளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம்.
விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்.
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.
யாழ்ப்பாண மாவட்டம்
சாட்டி மாவீரர் துயிலுமில்லம்.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்.
எல்லங்குளம், வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம்.
உடுத்துறை, வடமராட்சி மாவீரர் துயிலுமில்லம்.
ஆகிய இடங்களில் இந்தப் புனித ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை இன்று தமிழினத்தின் வரலாற்றை அழித்தொழிப்பதற்கு ஆக்கிரமிப்பாளர்களால் பட்டியலிடப்பட்ட இடங்களில் ஒன்றாகிவிட்டது. இந்தப் புனித கோயில்களினுள் அமைந்துள்ள கல்லறைகள் இடிக்கப்பட்டு, உழவுஇயந்திரங்கள் கொண்டு உழப்பட்டிருக்கின்றன. ஒருகாலத்தில் பாதணிகூட அணிந்து செல்லாத இடமாக தமிழ்மக்களால் பூஜிக்கப்பட்ட அந்தத் துயிலுமில்லச் சுற்றாடல் இன்று பற்றைகள் வளர்ந்து காடு கவிழ்ந்துபோய் கிடக்கின்றன.
இவை மட்டுமன்றி தமிழர் தாயகமெங்கும் அமைக்கப்பட்டிருந்த சுமார் 250 மாவீரர்கள் நினைவு தூபிகள் மற்றும் வீரத்துடன் எதிரிக்கு எதிராக படை நடத்திய தலைவர்கள், தளபதிகள் ஆகியோரது இல்லங்கள் ஆகியவையும் இடித்தழிக்கப்பட்டுள்ளன.
இனிவரும் தலைமுறைக்கு தமிழனின் வீரம் என்றால் என்ன என்பது மருந்துக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற வரலாற்று மமதையிலும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற உண்மை தெரிந்துவிடக்கூடாது என்ற இனவாத சிந்தனையுடனும் இது போன்ற வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்த படுபயங்கரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
ஆவணங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் பண்பாடு, கலாச்சாரம், மரபுமுறை வாழ்வியல் ஆகியவையும் ஓர் இனத்தின் வரலாற்றின் அடையாளங்களாகக் காணப்படுகின்றன என்பது உண்மையாயினும் – கண்ணீரிலும் செந்நீரிலும் நித்தமும் தனது வாழ்வின் அன்றாட முகங்களைப் பார்க்கும் தமிழினத்தின் வடுக்களில் மீண்டும் தீ கொட்டும் செயல்களாகவே இந்த வரலாற்று அழிப்புக்களை நோக்க வேண்டியிருக்கிறது.
ஓர் இனத்தின் வரலாற்று வடிவங்களை அழிக்கும் ஆக்கிரமிப்பினதும் அடக்குமுறையினதும் கொடூர பக்கங்களாகக் காணப்படும் இந்த அனுபவங்களையும் இன்று ஈழத்தமிழினம் தனது வரலாற்று அடையாளமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டியுள்ளது.
(நன்றி: பூமராங் மலர் 2010)