Categories
கட்டுரைகள்

நலந்தானா?  நலந்தானா ?

%e0%ae%95%e0%af%86%e0%ae%b3%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be

                          கௌசல்யா அந்தோனிப்பிள்ளை

 

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கூறுவார்கள். அப்படியாயின், குறைவில்லாத, நிறைவான செல்வத்துடன் எவராவது இன்று இருக்கின்றார்களா?  என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இன்றைய விஞ்ஞான யுகத்திலே, நோயில்லாத மனிதனைப் பார்ப்பது அரிது. “அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல் அரிது”  என்று அவ்வையார் அன்றே பாடிவைத்தார். ஆனால், அரிதினும் அரிது, மானிடராய்ப் பிறந்தபின் நோயின்றி வாழ்தல் என்று எழுதினால் இந்தக்காலத்திற்கு அது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஆனாலும், குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வு வாழ்ந்த மகான்கள் இந்த உலகில் இருந்துதான் இருக்கிறார்கள். எத்தனையோ தமிழ்மகான்கள் நூறு வயதிற்கும் மேல், நோய்நொடியின்றி வாழ்ந்து சமாதியடைந்திருக்கிறார்கள். அவர்களை நாம் கண்டதில்லை. வரலாறுகள் மூலமாக அறிகின்றோம். அவர்களின் வாழ்க்கை முறை இன்றைய உலகப் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனால். அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது என்பது இக்காலத்தவர்களால் இயலாதது.

இன்றைய மானிட சமூகத்தைத் தாக்குகின்ற நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றது. எப்போது, எந்தவிதமான வியாதி வந்து, எப்படி எமது வாழ்வு மாறும் என்பது நம் எவருக்குமே தெரியாத விடயம். மிக நீண்டகாலமாகப் புலம்பெயர்ந்த தமிழ்மக்களாகிய எம்மிடையே அதிக பீதியுடன் பேசப்படும் நோய்சம்பந்தப்பட்ட விடயம் புற்றுநோய் (Cancer) எனப்படும் கொடிய வியாதியாகும். வயது வித்தியாசமின்றி, குழந்தைகளிலிருந்து முதியோர் வரை எவருக்கும் வரக்கூடிய விரும்பத்தகாத ஒரு வியாதிதான் இந்தப் புற்று நோய்.

அண்மைக்காலமாக இதன் தாக்கம் உலக மக்களிடையே அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது ஒரு தொற்று நோயாஅல்லது பரம்பரை வியாதியா என்று பார்த்தால் இரண்டுமே இல்லை. ஆனால் ஒருசந்ததியில் இந்நோய் இருந்தால் அவர்களது வம்சாவழியினருக்கும் வருவதற்கான சாத்தியக்கூறுகளின் விகிதம், சந்ததியில் நோயில்லாதவர்களோடு ஒப்பிடும்பொழுது மிகமிக அதிகமாகவே இருக்கின்றது. அமெரிக்கப் புற்றுநோய்க் கழகத்தின் 2009 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரத்தின்படி மனித இறப்புக்குக் காரணமான நோய்களைப் பொறுத்தவரை இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அடுத்தபடியான இடத்தைப் புற்று நோயே பிடித்திருக்கின்றது. அமெரிக்காவில் ஏறத்தாழ இருபத்தியைந்து சதவீதமான இறப்புக்கள் பற்றுநோயாலேயே ஏற்படுகின்றன. அதிலும், நுரையீரல் புற்றுநோயும், மார்பகப் பற்றுநோயுமே மிகவும் அதிகளவில் அமெரிக்காவில் இருப்பதாக அவ்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

புற்று நோய் என்றால் என்ன? எப்படி அது வருகின்றது? அந்நோய் வராமல் தடுக்க எப்படி முயற்சி செய்யலாம் என்று சிறிது பார்ப்போமா?

முதலில் புற்றுநோய்க்கலம் என்பதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எமது உடலில் உள்ள சாதாரண கலங்களைப்பற்றி அறியவேண்டியது அவசியம். மனித உடலின் ஆக்கக்கூறுகளின் மிகச் சிறிய அலகை, அதாவது அடிப்படை அலகை அழைக்க கலம் (Cell) என்னும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு கலம் இரண்டாகவும், இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும், எட்டுப் பதினாறாகவும் இப்படியே பிரிவடைவதன் மூலமே கலத்தின் வளர்ச்சி நடைபெறுகின்றது. கலத்தின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் உப அலகைக் “கரு” (Nucleus) என்று அழைக்கிறோம். கலத்தின் வயது அதிகரிக்க, வயது முதிர்ந்த கலங்கள் இறப்பதும், புதிய கலங்கள் உருவாகுவதுமான செயற்பாடு கலத்தின் கருவினால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.

வழமைக்கு மாறாகக் கலங்கள் பிரிவடைந்து தன்னிச்சையாகப் பல்கிப் பெருகுவதைத்தான் “புற்றுநோய்” என்று கூறுகின்றோம். இயல்புக்கு மாறாகத் தன்னிச்சைப்படி கலங்கள் பிரிவடைந்து அபரிமிதமாகப் பெருகுவதற்கும், வயது முதிர்ந்த கலங்கள் இறக்காமல் தொடந்தும் இருப்பதற்கும் காரணம் – அதாவது புற்று நோய் எற்படுவதற்கான காரணம் – கலத்தின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் கருவிலுள்ள “பரம்பரை அலகு” (DNA) என்பதில் ஏற்படும் மாற்றங்களாகும். பரம்பரை அலகு பாதிப்புக்குள்ளாவதால், அதாவது மாற்றங்களுக்குட்படுவதால் அதில் பல குளறுபடிகள்(Mutations) ஏற்படுகின்றன. சில மாற்றங்கள் புற்றுநோய் உருவாவதற்கு வழிசமைக்கின்றன. ஆமாம், பரம்பரை அலகில் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான மாற்றங்களே முதிர்ந்த கலங்கள் இறப்பதைத் தடுக்கின்றன. அத்துடன் கலத்தின் கட்டுப்பாடின்றி, தேவை எதுவும் இன்றியே தன்விருப்பப்படி மிகமிக வேகமாகக் கலங்கள் பிரிவடைவதையும் தூண்டுகின்றன.

இயல்புக்கு மாறாகக் கலப்பிரிவு நடைபெறுவதனால் தோன்றுகின்ற புற்று நோய்க்கலங்கள் உடலின் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் குருதி (Blood) , நிணநீர் (Lymph) தொகுதிகளினூடாகக் கடத்தப்படுகின்றன. முதலில் எந்தவகையான கலத்தில் புற்றுநோய்க் கலங்கள் உருவாகின்றனவோ, அதன்பெயரினாலேயே அந்தநோயை வகைப்படுத்தியுள்ளார்கள். மார்புப் புற்றுநோய், குருதிப் புற்றுநோய் என்றிவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளன.

புரம்பரை அலகில் ஏற்படும் மாற்றங்களே புற்றுநோய் வருவதற்கான ஆரம்பப்படி என்று மேலே விபரித்துள்ளேன். அப்படியாயின் அந்த மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன?

கலப்பிரிவு நடைபெறும்பொழுது, சில மாற்றங்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன. ஆனால். பெரும்பாலான மாற்றங்கள் ஏற்படுவதற்கு எமது செயற்பாடுகளே காரணமாகின்றன என்றால் அது மிகையாகாது. அதிவீரியம் மிக்க கதிரியக்கங்கள் (Radiation, UV rays), பலவகையான இரசாயன மூலக்கூறுகள், மேலும் சில வைரஸ் தாக்கங்கள் என்பன இந்த மாற்றங்கள் ஏற்பட வழிசமைக்கின்றன. மாற்றங்களுக்கு உட்பட்ட பரம்பரை அலகுகள் ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்குக் காவப்படும்பொழுது இரண்டாவது சந்ததிக்கு இந்நோய் வருவதற்கான நிகழ்தகவு கூடுதலாகஇருக்கின்றது. ஏனெனில் அவர்களின் பரம்பரை அலகுகளில் ஏற்கனவே மாறுபாடுகள் இருப்பதனால், புதிதாக ஏற்படும் மாற்றங்கள் இந்நோய் உருவாகுவதற்கான வழியை மிக விரைவிலேயே ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

வருமுன் காப்பது எப்படி? எப்படித் தடுக்கலாம்?

பரம்பரை அலகுகள் அதிக மாற்றங்களுக்கு உள்ளாகாமல் எம்மால் இயன்ற மட்டும் தடுக்க முடியுமாயின், இந்நோய் வருவதிலிருந்து எம்மை ஓரளவு பாதுகாக்க முடியும். முதலாவதாக எமது உடலில் தேவையற்ற இரசாயன மூலக்கூறுகள் குவிக்கப்படுவதை முடிந்த அளவு தடுக்க வேண்டும். வீட்டுப்பாவனைகளில் நாளாந்தம் பயன்படுத்தும் கிருமிகொல்லிகள், துப்பரவு செய்யப் பயன்படுத்தும் இரசாயனத் திரவங்கள் என்பனவற்றை உடம்பில் படாதவாறு உபயோகிக்க முயலவேண்டும். அடிக்கடி அதிவீரியம் மிக்க கிருமி கொல்லிகளைப் பாவிப்பதையும் தவிர்த்தல் அவசியம். இப்போதெல்லாம் உணவுப் பதார்த்தங்கள் பலவற்றில் கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் உட்கொள்ளும் உணவுகளிலும் அவ்வாறு உணவைப் பதப்படுத்த, சமைக்க என்று தேவையற்ற இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்று அறிந்து முடிந்த அளவு  அவற்றைத் தவிர்ப்பது நலம். அதே வேளை எமது உணவில் பழங்களும் மரக்கறிகளுமே மிக அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கரும்பச்சை நிறமுள்ள மரக்கறிகளிலும், தக்காளி, மாதுளை, மற்றும் பெரி (Berry)  வகைப் பழங்களிலும் மிக அதிக அளவில் பரம்பரை அலகில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் காரணிகள் (Antioxidants) அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் அதிகளவு உண்பது நல்லது. இயற்கையாக உருவான அல்லது வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படுகின்ற – செயற்கை உரவகைகளோ கிருமிகொல்லிகளோ அனாவசியமாகப் பயன்படுத்தப்படாத – காய்கறிகளாக, பழங்களாக இருந்தால் இன்னும் நல்லதே. மீன்வகைகளில் உள்ள சில பதார்த்தங்களும் எமது உடலில் இந்நோய் வருவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நமது வாழ்வில் முற்றாகத் தடுக்கப்படவேண்டிய ஒன்று புகைபிடித்தலாகும். புற்றுநோய் வகைகளில் நுரையீரல் புற்றுநோயே அதிக அளவில் ஏற்படுகின்றது. நுரையீரல் புற்றுநோய்க்கு மூலகாரணி புகைபிடித்தலேயாகும். புகைபிடிப்பவருக்கு அருகில் நின்று அப்புகையைச் சுவாசிப்பதும் ஆபத்தானதே. ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்பார்கள். புகைபிடிப்பவரிடமிருந்து சில அடிகள் தூரம் விலகிநிற்பதே எமக்கு மட்டுமல்ல எமது சந்ததிக்கும் நாம் நல்லது செய்ததாக முடியும் என்றால் அது சாலப் பொருந்தும்.

அடுத்ததாக முக்கியமான விடயங்கள் யோகாசனம், உடற்பயிற்சி. தியானம் என்பனவாகும். உடல் சமநிலையைப் பேணுவதும், இந்நோய் வருவதைத் தடுக்க அல்லது தள்ளிப்போட உதவுவதாகச் சில ஆராய்ச்சிகள் உறுதிபடக் கூறுகின்றன. படபடப்பு, அளவுக்கதிகமான பதற்றம் என்பன உடம்பில் சில விரும்பத்தகாத இரசாயனப் பதார்த்தங்கள் உருவாவதைத் தூண்டுகின்றன. இவையும் கலங்களில் மாற்றங்கள் தோன்றுவதை ஊக்குவிக்கலாம். எனவே மனதை அமைதிப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமே. உடலுடன் உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால் அதன்மூலம் புற்றுநோயை முற்றாக விரட்டியடிக்க முடியாவிட்டாலும் அதைக் கொஞ்சம் எட்ட வைத்திருக்கவாவது முடியும்.

எனவே, “நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?” என்று எம்மை நாமே கேட்டுக்கொள்வோம். அதன்மூலம் நம்மை நாமே தற்காத்துக்கொள்வோம்.

(நன்றி: பூமராங் மலர் 2010)

                            —-0—-

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s