தெ. நித்தியகீர்த்தி (1947 – 2009) பருத்தித்துறை, புலோலியில் பிறந்த இவர் சிறுகதை, நாவல், நாடகம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்ருந்தவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் மெல்பனில் விக்ரோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர். இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன.
இவரது நூல்கள்
- மீட்டாத வீணை நாவல்
- தொப்புள் கொடி (நாவல்)
நாடகங்கள்
ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
- தங்கப் பதக்கம்
- தங்கம் என் தங்கை
- நீதி பிறக்குமா?
- பாட்டாளி
- பிணம்
- மரகதநாட்டு மன்னன்
- வாழ்வு மலருமா
நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
- கூடு தேடும் பறவைகள்
- மரணத்தில் சாகாதவன்
அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:
- பறந்து செல்லும் பறவைகள்
- ஊருக்குத் தெரியாது
- வேங்கை நாட்டு வேந்தன்
இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.
மறைவு
“தொப்புள் கொடி” என்னும் தன்னுடைய நாவலை மெல்பனில் வெளியீடு செய்ய 3 நாட்களே இருந்த நிலையில் நித்தியகீர்த்தி 2009 அக்டோபர் 15 வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார். ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பில் காலமானார்.