ஓவியர் ‘ஞானம்’ ஞானசேகரம்
நீண்டகாலமாக ஓவியத்துறையில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ‘ஞானம் ஆர்ட்ஸ்’ ஞானம் அவர்களின் ஓவியக்கண்காட்சிகள் மெல்பன், சிட்னி. கன்பரா ஆகிய மாநகரங்களில் நடைபெற்றுள்ளன. ஓவியர் ஞானம் அவர்கள் மெல்பனில் நடந்த மூன்றாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
திருமதி ஞானசக்தி நவரட்ணம்
தையல்கலையில் நுட்பமான வேலைப்பாடுகளை பதிவுசெய்து அற்புதமன காட்சிகளை கலாரசிகர்களுக்குப்படைக்கும் திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்கள் இந்தத்துறையில் நீண்டகாலம் பயிற்சி பெற்றவர். அவரது தையற்கலைக்கண்காட்சி மெல்பனில் நடந்த மூன்றாவது எழுத்தாளர்விழாவில் நடைபெற்றது. அன்றையதினம் அவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
கவிஞர் அம்பி
இலங்கையில் புகழ்பூத்த கவிஞர் அம்பி மூத்ததலைமுறை படைப்பாளியாவார். பல நூல்களின் ஆசிரியரான அம்பி, குழந்தைகளுக்காக ஏராளமான பாடல்களை புனைந்திருப்பவர். இவரது கொஞ்சும் தமிழ் என்னும் சிறுவர் இலக்கிய நூல் தமிழ் நாட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் விருதினைப்பெற்றுள்ளது. தமிழ் மருத்துவ முன்னோடி கிறீனின் சரிதத்தை ஆங்கிலத்தில் எழுதியமைக்காக அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு பாராட்டப்பட்ட கவிஞர் அம்பி, தமிழகத்தில் அறிஞர்அண்ணா காலத்தில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மகாநாட்டின்போது சிறந்த கவிதைக்காக தங்கப்பதக்கம் பரிசுபெற்றவர். கவிஞர் அம்பியின் பவள விழாவை முன்னிட்டு, கன்பராவில் நடந்த நான்காவது எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அண்ணாவியர் இளையபத்மநாதன்
நீண்டகாலமாக கூத்துக்கலையை அவுஸ்திரேலியாவில் வளர்த்துவரும் அண்ணாவியார் இளைய பத்மநாதன், இலங்கையிலும் தமிழகத்திலும் பல கூத்துக்கலைவடிவங்களை அரங்கேற்றியிருப்பவர். இவரது கலைப்பணி அவுஸ்திரேலியாவிலும் பல மாநாகரங்களில் மிகுந்த கவனிப்பு பெற்றுள்ளது. விக்ரோரியா பல்கலைக்கழகத்தின் சிறப்புப்பட்டதாரியான( Performance Studies ) அண்ணாவியர் இளையபத்மநாதன், Monash பல்கலைக்கழகத்தில் அரங்கக்கலைகளுக்காக முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றவர். அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாக்களில் கூத்துக்கலை தொடர்பாக கருத்துரைகளும் ஆற்றியிருக்கும் அண்ணாவியர் சில அரங்காற்றுகைகளிலும் ஈடுபட்டு பாராட்டுப்பெற்றவர். அண்ணாவியாரின் கலைப்பணியைப் பாராட்டி சிட்னியில் நடந்த ஐந்தாவது எழுத்தாளர் விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
கலைவளன் சிசு.நாகேந்திரன்
அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும், பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி முதலான நூல்களை எழுதியிருக்கும் மூத்த படைப்பாளி கலைவளன் சிசு.நாகேந்திரன் சிறந்த சமூகப்பணியாளரும் ஆய்வாளருமாவார் குத்துவிளக்கு, நிர்மலா முதலான ஈழத்துத்திரைப்படங்களிலும் தோன்றியிருக்கும் சிசு.நாகேந்திரன், இலங்கையில் பிரபலமான சக்கடத்தார் நாடகம் உட்பட பல நாடகங்களில் பங்கேற்றிருப்பவர். தொடர்ந்தும் அயராமல் எழுதிக்கொண்டிருக்கும் இவருக்கு தற்போது வயது 95. கலைவளன் சிசு.நாகேந்திரனின் சேவைகளைப்பாராட்டி, மெல்பனில் நடந்த ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
காவலூர் ராஜதுரை
இலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளியான காவலூர் ராஜதுரை சிறந்த வானொலி ஊடகவியலாளருமாவார். நாவல்,சிறுகதை, மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடுள்ளவர். அவரது திரைக்கதை வசனத்தில் வெளியான பொன்மணி திரைப்படம் சில விருதுகளையும் பெற்றுள்ளது. காவலூரின் சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் இவரது மகன் நவீனன் ராஜதுரையால் மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாகியிருக்கிறது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான காவலூர் ராஜதுரை Script net என்ற அமைப்பின் ஊடாக தமிழ் குறும்படங்களின் தேர்வுக்குழுவிலும் இயங்கியிருப்பவர். மெல்பனில் நடந்த ஏழாவது எழுத்தாளர் விழாவிலும் சிட்னியில் நடந்த இலக்கிய சந்திப்பு நிகழ்விலும் பாராட்டி கௌரவிக்கப்பட்ட காவலூர் ராஜதுரை 14-10-2014 ஆம் திகதி சிட்னியில் மறைந்தார்.
‘எஸ்.பொ’ பொன்னுத்துரை
ஈழத்தின் முன்னோடிப்படைப்பாளியான எஸ்.பொ. என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை ஆக்கஇலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆழமாகவேரூண்றி சாதனைகளைப்படைத்தவர். பரீட்சார்த்தமான எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தி பரவலாக்கியவர். 1924 பக்கங்களில் நீண்ட சுயசரிதையை (வரலாற்றில் வாழ்தல்) இரண்டு பாகமாக எழுதியிருக்கும் எஸ்பொ, அக்கினிக்குஞ்சு (அவுஸ்திரேலியா), இளம்பிறை (இலங்கை) முதலான இதழ்களின் ஆலோசகராகவும் பணியாற்றியிருப்பவர். தமிழகத்தில் மித்ர பதிப்பகத்தை உருவாக்கி இலங்கை, தமிழக படைப்பாளிகள் உட்பட பல புலம்பெயர் படைப்பாளிகளின் நூல்களையும் பதிப்பித்திருப்பவர். அயராமல் எழுத்தூழியத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.பொ.வின் பவள விழாக்காலத்தில் மெல்பனில் நடந்த ஏழாவது எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். எஸ்.பொ. சிட்னியில் 26-11-2014 ஆம் திகதி மறைந்தார்.
கலாகீர்த்தி பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்
தகைமைசார் பேராசிரியராக விளங்கும் கலாகீர்த்தி பொன். பூலோகசிங்கம், இலக்கிய ஆய்வு மற்றும் விமர்சனத்துறையில் நீண்டகாலமாக ஈடுபடும் மூத்த தலைமுறை எழுத்தாளராவார். இலங்கையில் நாவலர் சபையில் அங்கம் வகித்து அரும்பணிகள் ஆற்றியவர். மூத்ததலைமுறையைச்சேர்ந்த பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள் சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
கட்டிடக்கலைஞர் வி.எஸ்.துரைராஜா
இலங்கையின் புகழ்பூத்த கட்டிடக்கலைஞராக விளங்கிய வி.எஸ்.துரைராஜா சிறந்த கலா ரஸிகர் ஆவார். குத்துவிளக்கு என்னும் சிறந்த தமிழ்ப்படத்தை இலங்கையில் தயாரித்து வெளியிட்டு சாதனை படைத்தவர். புனரமைக்கப்பட்ட யாழ்.பொது நூலகம் மற்றும் தந்தை செல்வா நினைவுத்தூபி உட்பட பல கலாசார சின்னங்களை வடிவமைத்தவர் கட்டிடக்கலைஞர் வி.எஸ்.துரைராஜா. சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர் விழாவில் இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். வி. எஸ். துரைராஜா 14-12-2011 ஆம் திகதி சிட்னியில் மறைந்தார்.
தெளிவத்தை ஜோசப்
இலங்கையில் மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கு வளம்சேர்த்த மூத்ததலைமுறைப்படைப்பாளியான தெளிவத்தைஜோசப், சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், விமர்சனம் மற்றும் இலக்கிய ஆய்வுத்துறைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருப்பவர். மலையக இலக்கியம் தொடர்பாக விரிவான ஆய்வு நூலை எழுதியிருக்கும் தெளிவத்தை ஜோசப், இலங்கையில் இரண்டு தடவைகள் சாகித்திய விருதுகள் உட்பட பல இலக்கிய விருதுகளும் பெற்றிருப்பவர். தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதும் பெற்றவர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதியகாற்று திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர். இலக்கிய ஆய்வுத்தொடர்கள், பயண இலக்கியம் உட்பட ஏராளமான கட்டுரைகளை படைத்திருப்பவர். தெளிவத்தை ஜோசப் அவர்களின் பவளவிழாவை முன்னிட்டு, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் விசேடவிருந்தினராக அழைக்கப்பட்டு மெல்பனில் நடந்த ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டவர்.
லெ. முருகபூபதி
நான்கு தசாப்பதங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டிருக்கும் லெ. முருகபூபதி படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் இயங்குபவர். வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியரான முருகபூபதி, அவுஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியவற்றின் ஸ்தாபகராவார். 2011 ஆம் ஆண்டு முருகபூபதியின் மணிவிழாக்காலத்தில் சங்கத்தின் சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்
இலங்கையில் நீண்டகாலமாக வெளிவரும் ஞானம் கலை, இலக்கிய இதழின் ஆசிரியரும் படைப்பிலக்கியவாதியுமான தி. ஞானசேகரன், சிறுகதை, நாவல், பயணஇலக்கியம், நேர்காணல் முதலான துறைகளில் பல நூல்களை வரவாக்கியிருப்பவர். இவரின் பவளவிழா காலத்தில் சங்கத்தினால் 2016 இல் கன்பராவில் நடத்தப்பட்ட கலை – இலக்கியம் 2016 விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.